Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பழநியில் பக்தர்கள் ஆரவாரமின்றி நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சி

பழநியில் பக்தர்கள் ஆரவாரமின்றி நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சி

By: Nagaraj Sat, 21 Nov 2020 4:27:10 PM

பழநியில் பக்தர்கள் ஆரவாரமின்றி நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சி

ஆரவாரமின்றி நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சி... கொரோனா பரவலால் பழநி மலைக்கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி பக்தர்கள் ஆரவாரமின்றி நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15ம் தேதி மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்றுமாலை நடந்தது. இதையொட்டி மலைக்கோயிலில் நேற்று பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது.

தொடர்ந்து 2.30 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்ததும், கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் வடக்கு கிரிவீதி வந்தடைந்தார்.

தொடர்ந்து கோயில் தலைமை குருக்கள் அர்ச்ச ஸ்தானிகர் அமிர்தலிங்கம் வேல் கொண்டு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் வதம் செய்தார்.

surasamahara ceremony,no cheering,corona,devotees ,சூரசம்ஹார விழா, ஆரவாரம் இல்லை, கொரோனா, பக்தர்கள்

முன்னதாக நவவீரர்கள், வீரபாகு உள்ளிட்டோர் சூரரிடம் சமரசம் பேசும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் போன்றோரின் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம் நடந்தது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடந்தது.

பின்பு மலைக்கோயிலில் சம்ரோட்சனை பூஜை செய்யப்பட்டு நடை திறந்து இராக்காலபூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி ரவளிபிரியா, டிஎஸ்பி சிவா, துணை ஆணையர் செந்தில்குமார், ஆர்டிஓ அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கிரி வீதிக்குள் கடைகள் அடைக்கப்பட்டு, வெளியாட்கள் நுழையா வண்ணம் 27 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருக்கல்யாணம் இன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மலைக்கோயிலிலும், மாலை 6.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோயிலிலும் நடைபெறுகிறது.

Tags :
|