Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய 75வது ஆண்டு

ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய 75வது ஆண்டு

By: Nagaraj Thu, 06 Aug 2020 8:18:27 PM

ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய 75வது ஆண்டு

ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்ட 75வது ஆண்டு... ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றன.

1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டம். அனைத்து நாடுகளும் தனது எதிரிகளை வீழ்த்த பல்வேறு திட்டங்களை தீட்டின. அந்த நேரத்தில் அமெரிக்கா தனது எதிரி நாடான ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமாவில் ஆக. 6ம் தேதியும் நாகசாகியில் ஆக. 9ம் தேதியும் அடுத்தடுத்து அணுகுண்டுகளை வீசின.

உலக வரலாற்றில் அனுகுண்டுகளை போரில் பயன்படுத்தியது இதுவே முதல்முறை. இந்த இரு அணுகுண்டு வீச்சுகளால் நேரிட்ட விளைவுகள் மிகப் பயங்கரமாக இருந்தன. குண்டுகள் வீசப்பட்ட 2 முதல் 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் அரசு அறிவித்தபடியே 90,000 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த மாதங்களில் இறந்தவர்களுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை சுமார் 1,66,000 ஆக உயர்ந்தது.

japan,atomic bombs,the day it was thrown,great controversy,all over the world ,
ஜப்பான், அணுகுண்டுகள், வீசப்பட்ட நாள், பெரும் சர்ச்சை, உலகெங்கும்

நாகசாகியில் 60,000 முதல் 80,000 வரையிலானோர் உயிரிழந்தார்கள். இறந்தவர்களில் பாதிப் பேர் குண்டு வெடிப்பு நடந்த தருணத்திலேயே அந்தந்த இடங்களிலேயே உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு பெயர் "லிட்டில்பாய்" மற்றும் மூன்று நாள்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு பெயர் "ஃபேட் மேன்".

எனோலாகே என்ற விமானம் மூலம் "லிட்டில் பாய்" என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா நகரத்தின் நடுப்பகுதியில் வீசியது அமெரிக்க ராணுவம். அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டியவர் விமானியும் படைத் தளபதியுமான பால்டிப்பெட்ஸ். அவர் தாயின் பெயரும்கூட 'எனோலாகே' என்பதாகும்.

அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சப்தத்துடன் வெடித்து நகரத்தில் 2,000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் பற்றியெரிந்தன.மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் ஆரத்துக்குள்பட்ட நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. அனைத்துக் கட்டடங்களும் தரைமட்டமாயின. பிஞ்சு குழந்தை முதல் முதியோர் வரை பலர் உடல் கருகி உயிரிழந்தனர்.

japan,atomic bombs,the day it was thrown,great controversy,all over the world ,
ஜப்பான், அணுகுண்டுகள், வீசப்பட்ட நாள், பெரும் சர்ச்சை, உலகெங்கும்

தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானின் வேறு எந்த பகுதிகளுக்கும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஹிரோஷிமாவில் என்ன நடக்கிறது என்பதை அந்நாட்டு அதிகாரிகளால்கூட கணிக்க முடியவில்லை. இந்த நிகழ்வு நடந்து பதினாறு மணி நேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் மூலம்தான் உலக அரங்கிற்கு என்ன நடக்கிறது என உணர முடிந்தது.

நாகசாகி மீது வீசப்பட்ட "பேட்மேன்" அணுகுண்டு வெடித்தவுடன் பல ஆயிரம் அடி உயரத்திற்கு தீப்பிழம்பு உருவானது. மேகங்களாக உயரத்தில் அடர்த்தியான நச்சுக் கரும்புகை உருவெடுத்து உலவின.
இந்த குண்டுவீச்சு நடந்து 6-வது நாளில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இந்த அணுகுண்டு வீச்சுதான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.

ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசி பேரழிவை ஏற்படுத்தாத பட்சத்தில் இரண்டாம் உலகப் போர் மேலும் பல மாதங்கள் நீடித்து, இதைவிட அதிகமான மக்கள் இறந்திருப்பர் என்று அப்போது அமெரிக்கா குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலைப்பாடு பற்றிய பெரும் சர்ச்சை இன்றும் உலகெங்கும் தொடர்கின்றது.

Tags :
|