Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பறவைகளுக்காக தன் தோட்டத்தில் சிறுதானியம் பயிரிட்டு அறுவடை செய்யாமல் விடும் விவசாயி

பறவைகளுக்காக தன் தோட்டத்தில் சிறுதானியம் பயிரிட்டு அறுவடை செய்யாமல் விடும் விவசாயி

By: Nagaraj Tue, 18 Aug 2020 7:52:01 PM

பறவைகளுக்காக தன் தோட்டத்தில் சிறுதானியம் பயிரிட்டு அறுவடை செய்யாமல் விடும் விவசாயி

பறவைகளுக்காக தன் தோட்டத்தில் பாதியை ஒதுக்கி சிறுதானியங்களை பயிரிடுகிறார் கோவையை சேர்ந்த விவசாயி ஒருவர்.

கோவை மாவட்டம் குளத்துபாளையம் பகுதியில் பறவைகள் வந்து உண்ண வேண்டும் என்பதற்காக, தனது தோட்டத்தில் சிறுதானிய பயிர்களைப் பயிரிட்டு, அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு வைத்துள்ளார் இயற்கை விவசாயி ஒருவர். சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகளும்... சிறுதானியங்களைத் தேடி வரும் தேன் சிட்டுக்களும் அன்பைப் பறிமாறிக் கொள்ளும் இந்த தோட்டம் பறவைகளுக்காகவே ஒதுக்கப்பட்டது என்றால் வியப்பாகத்தானே இருக்கும்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி முத்து முருகனின் பறவைகளுக்கான அருட்கொடை தான் இந்த தோட்டம். தனக்கு சொந்தமான 2 1/2 ஏக்கரில் "பூமி அனைத்து உயிர்களுக்குமானது என்ற எண்ணத்தை சிறுதானியங்களாக விதைத்து, விளைவித்து அதில் கால்பகுதியை பறவைகள் மற்றும் ஆடு, மாடுகளின் பசியைப் போக்குவதற்காக அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு வைத்துள்ளார் விவசாயி முருகன்.

nature farmer,birds,her garden,cereal ,இயற்கை விவசாயி, பறவைகள், தன் தோட்டம், சிறுதானியம்

கடந்த பத்தாண்டு காலமாக இயற்கை விவசாய முறையைப் பின்பற்றி, காய்கறி, பழங்கள், தானிய வகைகளை சாகுபடி செய்து வரும் முருகன், சாகுபடியில் கிடைப்பதை மக்களுக்கு விற்பனையும் செய்து வந்துள்ளார். தோட்டத்தில் உணவு தேடி வரும் பறவைகளைக் கண்ட அவரது மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் தோட்டத்தின் ஒரு பகுதியை பறவைகளின் உணவு தேவைக்காக மானாவாரி சிறு தானிய பயிர்களான கம்பு, சோளம் ஆகியவை சாகுபடி செய்ததாக தெரிவிக்கின்றார்

நீண்ட காலமாக பயிர்தானம் செய்து வருவதால் கூட்டமாக வந்து கொத்தித் தின்பதை செல்லச்சிட்டுக்களும் வழக்கமாகியுள்ளன. அவை உண்டபின் மீதம்வைக்கும் சோளக் காட்டை கால்நடைகளுக்கு உணவாகத் தருகிறார். இப்படி உயிர்வேலி அமைத்து பல்லுயிர்ச் சூழலை உருவாக்கியுள்ளார் முருகன்.

நன்மை தரும் மண்ணுக்கு, மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் நன்மையைத்தான் திருப்பிக் கொடுத்துச் செல்கின்றன. மனிதர்களின் பேராசையால் மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்படுவதால் பறவைகள் உள்ளிட்ட உயிரினப் பெருக்கம் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்த முருகன், இதற்காகவே தனது நிலத்தில் கால் பகுதியில் பறவைகளுக்குப் பிடித்தமான சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்ததாகக் கூறுகிறார். அவற்றை திணைக் குருவி, மயில், மைனா, கிளி, செம்பூத்து உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்து உட்கொண்டு செல்வதை காண்பது மனதிற்கு இதமாக இருப்பதாக கூறுகிறார் அவர்.

பறவைகள் போடும் எச்சத்தில் உள்ள விதைகள் மரங்களாக மாறுகின்றன என்றும், பறவைகளுக்காக செலவு செய்வதை நஷ்டமாக கருதவில்லை எனக் குறிப்பிட்ட முருகன், தன்னால் முடிந்த சிறு உதவியை உலகிற்கு நன்மை பயக்கும் பறவைகளுக்கு அளிப்பதால் நிம்மதி கிடைத்துள்ளதாகக் கூறுகிறார். இங்கு பறவைகள் மட்டுமின்றி சின்ன, சின்ன உயிரினங்களும் காட்டில் சுதந்திரமாக உலா வருவதை காண முடிகிறது.

Tags :
|