Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை- நாராயணன் திருப்பதி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை- நாராயணன் திருப்பதி

By: Monisha Sat, 12 Dec 2020 2:38:18 PM

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை- நாராயணன் திருப்பதி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிக பரப்பளவு, மக்கள் தொகை, இயற்கை வளங்கள் கொண்ட நம் நாட்டில் தொழில்துறை மற்றும் சேவைதுறையின் வளர்ச்சி, விவசாய துறையை பின்தள்ளி முன்னுக்கு வந்தது. இதற்கு முழு காரணம் அந்த இரு துறைகளின் மீது மத்திய மாநில அரசுகள் செலுத்திய அக்கறையும், விவசாயத்துறையின் மீதான அலட்சியமுமே.

விவசாயதுறையில் புதிய பல சோதனைகளை மேற்கொள்வதோடு, விவசாயத்துறையில் முதலீடுகளை அதிகரித்து அந்த துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து எம்.எஸ்.சுவாமிநாதன் குழு 2006-ல் அறிக்கை கொடுத்த போதும் 2014 வரை அந்த குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி வந்தவுடனேயே அந்த அறிக்கையின் பல பரிந்துரைகளை நிறைவேற்ற தொடங்கியது. விவசாய கடன் அட்டை, மண்வள அட்டை, பயிர் காப்பீடு, பயிர் கடன், ஊரக வளர்ச்சி, சொட்டு நீர் பாசன திட்டம் , விவசாய தொழிலாளிகளுக்கான ஓய்வூதியம் ஆகிய திட்டங்களை முழு வேகத்தோடு செயல் படுத்தியது. விவசாயிகளுக்கான கவுரவ நிதியாக ரூ.9 கோடி விவசாய குடும்பங்களுக்கு வருடம் ரூபாய் ஆறாயிரம் வழங்கியது.

central government,agricultural law,agrarian,benefit,progress ,மத்திய அரசு,வேளாண் சட்டம்,விவசாயி,நன்மை,முன்னேற்றம்

விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்க எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேளாண் சீர்திருத்தங்களுக்கான புதிய சட்டங்களை இயற்றியது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க இது வரை இருந்த கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இடை தரகர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக அகற்றப்படும். விளைபொருட்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

விளைபொருட்களை எந்த மாநிலத்திற்கும் எடுத்து சென்று வர்த்தகம் செய்ய முடிவதோடு, எந்த மாநிலமும் இனி விவசாய பொருட்களுக்கு வரியோ அல்லது கட்டணமோ வசூலிக்க முடியாது. பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் நுழைவு வரி உட்பட பல்வேறு வரிகள் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டிருந்தது இனி முற்றிலுமாக அகற்றப்பட்டு, சந்தையை விரிவடைய செய்யும். குறிப்பாக தமிழக விவசாயிகளின் விளைபொருட்கள் இது வரை பலமாநிலங்களில் விற்க வேண்டியிருந்தால், அதிக வரி செலுத்தி வந்ததால் விலை அதிகமானதன் காரணமாக விற்பனை குறைவாக இருந்தது. இனி அந்த நிலை அகற்றப்படும். தமிழக விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும்.

இதுநாள் வரை தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச ஆதார விலைக்கு எந்த சட்டமும் இருந்ததில்லை. அது அரசின் கொள்கை மற்றும் உத்தரவாதமே. கடந்த ஆட்சியில் 6 பொருட்கள் மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலையில் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு 17 பொருட்களை கொள்முதல் செய்கிறது. குறைந்த பட்ச ஆதார விலை இல்லாத பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளை பொருட்களை ஏல முறையில் இடைத்தரகர்களின் துணையோடு, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள் விவசாயிகள்.

central government,agricultural law,agrarian,benefit,progress ,மத்திய அரசு,வேளாண் சட்டம்,விவசாயி,நன்மை,முன்னேற்றம்

இந்த முறையில் இடைத் தரகர்களும், மொத்த வியாபாரிகளுக்கும் தான் லாபம் அதிகம் என்பதோடு மாநில அரசுகளுக்கு வரி செலுத்தி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர் என்பது கண்கூடு. புதிய சட்டங்கள் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வெளிப்படையான ஏலத்தில் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பதன் மூலம் லாபத்தை சேமிக்க முடியும். ஆகவே, எந்த ஒரு நிலையிலும் விவசாயிகளுக்கு எதிராக இந்த புதிய வேளாண் சட்டங்கள் செயல்படாத போது, இடைத்தரகர்களின், அரசியல்வாதிகளின் கட்டுப் பாட்டிலிருந்து விவசாயிகள் விடுபடக்கூடாது என்பதால் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை செய்து நவீன கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன் படுத்துவதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும்.தேசிய வேளாண் மின்னணு சந்தை மற்றும் ஒப்பந்த சட்டங்களின் மூலம் விவசாயிகளின் உழைப்புக் கேற்ற வருமானம் பெருகும். தேவை அதிகரிக்கும் போது, விலை அதிகரிக்கும் என்பது பொதுவான பொருளாதார விதி. ஆனால் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், தேவையை பூர்த்தி செய்யமுடியாத நிலையை இதுநாள் வரை வேளாண் துறை சந்தித்து கொண்டிருந்த நிலையில் தற்போதைய சட்டங்கள் சந்தையை விரி வாக்கி, தேவையை விரிவாக்கி, வருமானத்தையும் விரிவாக்கும் வாய்ப்பை விவசாயிகளுக்கு உருவாக்கி இருக்கிறது.

மேலும், உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பல துறைகள் முடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் வேளாண் உற்பத்தியும், ஏற்றுமதியும் 18-26 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்த காலம் மறைந்து உழைப்புக்கேற்ற வருமானம் அவர்களை தேடி செல்லும் காலம் வந்து விட்டது என அதில் கூறியிருக்கிறார்.

Tags :