Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தால் எழுந்துள்ள சர்ச்சை

முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தால் எழுந்துள்ள சர்ச்சை

By: Nagaraj Wed, 14 Oct 2020 7:45:51 PM

முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தால் எழுந்துள்ள சர்ச்சை

சர்ச்சையை கிளப்பியுள்ள ஆளுநர் கடிதம்... மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் கோஷ்யாரி எழுதிய கடிதம், தேசிய அளவில் அரசியல் சாசன சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிப்பதாக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பிரதமர் மோடிக்கு அதிர்ச்சிக் கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் பங்குபெற்றுள்ள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே கடுமையான கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது மகாராஷ்டிர மாநிலம். இந்த நிலையில் கோயில்களை இப்போதைக்கு திறப்பதில்லை என மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது.

இதுகுறித்து மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதம் ஏதோ ஓர் அரசியல்வாதியின் கடுமையான தாக்குதலைப் போல அமைந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில் ஆளுநர், “முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களே... நீங்கள் தீவிரமான இந்துத்துவவாதி என்பது அனைவரும் அறிந்தது. முதல்வர் பதவியேற்றுக் கொண்டவுடன் நீங்கள் அயோத்தி சென்று வந்தீர்கள். இப்படிப்பட்ட நிலையில் மாநிலத்தில் கோயில்களைத் திறப்பதை ஒத்திவைத்துள்ளீர்கள்.

governor,chief minister,letter,prime minister ,ஆளுநர், முதல்வர், கடிதம், பிரதமர்

கடவுள் உங்களிடம் வந்து இது பற்றி ஏதாவது தெரிவித்தாரா அல்லது நீங்கள் எப்போதுமே வெறுக்கும் வார்த்தையான மதச்சார்பின்மை என்ற வார்த்தைக்கு நீங்களும் திரும்பிவிட்டீர்களா?" என்று கேட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த வார்த்தைகள் மகாராஷ்டிரா மாநில அரசியலைத் தாண்டி தேசிய அளவில் கடுமையான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. இதற்கு உடனடியாகப் பதில் அளித்திருக்கும் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, “நான் இந்துத்துவவாதிதான். ஆனால், எனது இந்துத்துவம் பற்றி நீங்கள் சான்றளிக்க தேவையில்லை” என்று ஆளுநருக்குத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "அரசியலமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட பதவியான ஆளுநர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி அறிக்கை விடுவதும் அது ஊடகங்களுக்குக் கசியவிடப்படுவதும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

நமது அரசியலமைப்பு சட்டத்தின் முதன்மையான வார்த்தையாக மதச்சார்பின்மை என்ற வார்த்தை அமையப் பெற்றிருக்கும் நிலையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி ஆளுநர் எழுதியிருக்கும் கடிதம் உத்தவ் தாக்கரேவின் எதிர்க்கட்சியினரை போல இருக்கிறது.

மேலும் ஆளுநரின் அறிக்கை மொழி வலி மிகுந்ததாக இருக்கிறது. ஆளுநரின் கடிதம் மீடியாக்களுக்குச் சென்றதால் முதல்வர் உத்தவ் தாக்கரே, வேறுவழியின்றி ஊடகங்கள் வழியே தான் பதிலளிக்கும்படி ஆகிவிட்டது. இதுகுறித்து பிரதமர் கவனிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். மாநில காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று குற்றம்சாட்டி உள்ளது.

Tags :
|