Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பதில் தாமதம்; ஆன்லைன் வகுப்புகள் தீவிரம்

பள்ளிகள் திறப்பதில் தாமதம்; ஆன்லைன் வகுப்புகள் தீவிரம்

By: Monisha Fri, 18 Dec 2020 1:27:55 PM

பள்ளிகள் திறப்பதில் தாமதம்; ஆன்லைன் வகுப்புகள் தீவிரம்

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகின்றனர். தொற்று பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் பள்ளி திறப்பு பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மேலும், மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மன அழுத்தத்தில் உள்ளனர்.

corona,curfew,schools,online,class ,கொரோனா,ஊரடங்கு,பள்ளிகள்,ஆன்லைன்,வகுப்பு

பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு பாடத்திட்டம் 35 சதவீதம் குறைக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். ஆனால் அது பற்றிய விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எந்த பாடங்களை படிப்பது, தவிர்ப்பது என்று தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பொங்கல் முடிந்து பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. பிப்ரவரி மாதம் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

பள்ளிகளை திறக்க வேண்டும் என்று 50 சதவீத பெற்றோர்கள் கூறினாலும் மீதம் உள்ளவர்கள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகிறது. பள்ளிகள் திறப்பது குறித்து அரசு இதுவரையில் எவ்வித உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகளை தீவிரப்படுத்த பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

Tags :
|
|
|