Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்படிப்பு படிக்க வசதியின்றி தவித்த மாணவிக்கு உதவிகரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்

மேற்படிப்பு படிக்க வசதியின்றி தவித்த மாணவிக்கு உதவிகரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்

By: Nagaraj Tue, 04 Aug 2020 5:13:28 PM

மேற்படிப்பு படிக்க வசதியின்றி தவித்த மாணவிக்கு உதவிகரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்

மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்... ‘பன்னிரண்டாவது வகுப்பில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றும் மேற்படிப்பு படிக்க வசதியில்லை’ என்று மாணவி ஒருவர் எழுதிய கடிதத்தைப் பார்த்து மாவட்ட ஆட்சியரே நேரில் சென்று உதவிய சம்பவம் ஆரணியில் நெகழிச்சி்யை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகே அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாணவி பரிமளா. இவரது தந்தையும், அண்ணனும் கூலி வேலை செய்கின்றனர். பரிமளாவின் தாயாருக்குக் காது கேட்காது. இந்த நிலையில், உறவினர் வீட்டில் தங்கி, ஆரணிக்கு அருகேயுள்ள பெரணமல்லூர் கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 - ம் வகுப்பு பயின்று வந்தார் பரிமளா. இறுதித் தேர்வில் 600 க்கு 502 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாகவும் தேர்ச்சி பெற்றார்.

பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றும், குடும்பத்தில் நிலவிய வறுமை நிலை காரணமாக மேல் படிப்பு படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது பரிமளாவுக்கு. இந்த நிலையில் தான் தனது குடும்ப சூழலை விளக்கி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதினார்.

district collector,thiruvannamalai,student,higher education,green house ,
மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை, மாணவி, மேற்படிப்பு, பசுமை வீடு

“12 - வது வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளேன். குடும்பத்தில் உள்ள அனைவரும் கூலி வேலை பார்த்துதான் என்னை இதுவரை படிக்க வைத்தனர். எனக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால், மேல் படிப்பு படிக்க வசதியில்லாமல் இருக்கிறேன். தொடர்ந்து படிக்க தாங்கள் தான் எனக்கு உதவி செய்யவேண்டும்” என்று மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதினார் பரிமளா.

மாணவி எழுதிய கடிதத்தைப் படித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மாணவி பரிமளாவின் வீட்டுக்கு நேரில் சென்றார். பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து அடுத்த மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் தங்கும் விடுதி செலவையும் ஏற்றுக்கொண்டார்.

இத்துடன் இல்லாமல் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவதற்குப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார். மாணவியின் ஏழ்மை நிலையைப் பார்த்தவர் பரிமணாவிடம் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட பணி ஆணையையும் வழங்கினார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, “வாழ்க்கையில் அனைவரும் பணிக்குச் சென்ற பின்னர்தான் வீடு கட்டுவார்கள். ஆனால், மாணவி பரிமளாவின் வாழ்க்கையில் பசுமை வளர வேண்டும் என்பதற்காகப் பசுமை வீடு வழங்குகிறேன்” என்றார்.

இதற்கு முன்பு, கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் நீட் தேர்வு பயிற்சி பெறவும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :