Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6 மாதங்களாக செயல்படாத ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம்; தமிழக அரசு அறிவிப்பு

6 மாதங்களாக செயல்படாத ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம்; தமிழக அரசு அறிவிப்பு

By: Monisha Thu, 20 Aug 2020 09:15:23 AM

6 மாதங்களாக செயல்படாத ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழக கருவூல விதிகளின்படி, ஓய்வூதியர் ஒருவரின் வங்கி கணக்கு எந்தவித செயல்பாடும் இன்றி தொடர்ந்து 6 மாதங்களுக்கு இருந்தால், அதுபற்றி ஓய்வூதியம் வழங்கும் அதிகாரியிடம் அந்த வங்கி தெரிவிக்க வேண்டும் என்றும், அந்த வங்கி கணக்கிற்கு ஓய்வூதியம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் சி.சமயமூர்த்தி உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் இதற்கு ஓய்வூதியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தன. கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக முதியவர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு கூறியுள்ள நிலையில், ஆன்லைன் வசதி இல்லாத ஓய்வூதியர்கள் எப்படி வங்கிக்கு சென்று கணக்கை செயல்படுத்த முடியும்? என்று அந்த சங்கங்கள் கேள்வி எழுப்பி இருந்தன. மேலும், இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

pensioner,bank account,online,corona virus,government of tamil nadu ,ஓய்வூதியர்,வங்கி கணக்கு,ஆன்லைன்,கொரோனா வைரஸ்,தமிழக அரசு

இந்தநிலையில் கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் சி.சமயமூர்த்தி, அனைத்து கருவூல ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களும், ஓய்வூதியர்களும் எழுதிய கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்காதது பற்றி தெரிவித்திருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, அவர்களுக்கு குறிப்பாக முதியோர் வெளியே செல்வதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளினால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஓய்வூதியர்கள் தங்களின் வங்கி கணக்கை இயக்க முடியாமல் போய்விட்டது.

எனவே கொரோனா பரவல் காரணங்களுக்காக, கடந்த 6 மாதங்களாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம். இதுகுறித்த தகுந்த அறிவுரைகளை சார் கருவூலம் உள்பட அனைத்து கீழ்நிலை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|