Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டசபை தேர்தல்: முதலமைச்சர் ஆறு நாள் தீவிர பிரச்சாரம்

சட்டசபை தேர்தல்: முதலமைச்சர் ஆறு நாள் தீவிர பிரச்சாரம்

By: Monisha Tue, 29 Dec 2020 2:44:56 PM

சட்டசபை தேர்தல்: முதலமைச்சர் ஆறு நாள் தீவிர பிரச்சாரம்

வருகிற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. கடந்த 19-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் பிரச்சாரம் 27-ம் தேதி முறைப்படி தொடங்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் நடந்த பிரச்சார தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து முதலமைச்சர் இன்று முதல் ஆறு நாட்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த பிரச்சாரம் நடைபெற உள்ளது. வருகிற 4-ம் தேதி வரை இந்த பிரச்சாரம் நடக்கிறது. அப்போது பொதுக்கூட்டம், வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்தல், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், பிரமுகர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மீனவர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

election,campaign,constituency,tour,public meeting ,தேர்தல்,பிரச்சாரம்,தொகுதி,சுற்றுப்பயணம்,பொதுக்கூட்டம்

முதலாவதாக இன்று நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். நாளை மீண்டும் பிரச்சாரம் தொடங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் சேந்தமங்கலம் செல்கிறார். பின்னர் 11.30 மணியளவில் திருச்சி மாவட்டத்துக்கு செல்கிறார். 31-ம் தேதி மீண்டும் திருச்சி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் முதலமைச்சர் காலை 8.00 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். மேலும், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். அடுத்ததாக திருச்சி சோமசரசன் பேட்டையில் மகளிர் சுயஉதவிக்குழுவுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

1-ம் தேதி புத்தாண்டு அன்று பிரச்சாரம் செய்யவில்லை. 2-ம் தேதி மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அவரது பிரச்சாரம் நடக்கிறது. 3-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி கயத்தாறு மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துகிறார்.

4-ம் தேதி மாலை 4.00 மணிக்கு கருங்குளத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஸ்ரீவைகுண்டம் சென்று வைகுண்டநாதர் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தூத்துக்குடி திரும்பும் அவர் உள்ளூர் பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அத்துடன் ஆறு நாள் பிரச்சார நிகழ்ச்சி முடிகிறது.

Tags :
|