Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் டெல்லியில் குவியும் விவசாயிகள்

போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் டெல்லியில் குவியும் விவசாயிகள்

By: Karunakaran Fri, 11 Dec 2020 1:01:36 PM

போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் டெல்லியில் குவியும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வடமாநில விவசாயிகள் டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 16-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. விவசாய பிரதிநிதிகளிடம் இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது. இருப்பினும் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி இருக்கிறார்கள். 14-ந் தேதி டெல்லியை முழுமையாக முற்றுகையிடப் போவதாகவும், டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் பஞ்சாப்பில் இருந்து இப்போது மேலும் ஏராளமான விவசாயிகள் டெல்லி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

farmers struggle,delhi,agricultural laws,narendra singh tomar ,விவசாயிகள் போராட்டம், டெல்லி, விவசாய சட்டங்கள், நரேந்திர சிங் தோமர்

ஏற்கனவே விவசாயிகள் டிராக்டர்கள் மூலமாக டெல்லி வந்து குவிந்தனர். இப்போது பஸ்கள், வேன்களில் பஞ்சாப் விவசாயிகள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் போராட்டம் மோசமான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க மத்திய அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் விவசாயிகள், அடுத்ததாக அனைத்து இடங்களிலும் ரெயில் மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் சம்பந்தப்பட்ட விவகாரம், மாநில அரசின் கையில் உள்ளது. எனவே விவசாயிகள் தொடர்பாக எந்த சட்டத்தையும் இயற்றுவதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் பஞ்சாப்பிலும் விவசாயிகள் தனியாக போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

Tags :
|