Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்வி கூடங்களை திறப்பதை தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போட வேண்டும்; ஜி.கே.வாசன்

கல்வி கூடங்களை திறப்பதை தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போட வேண்டும்; ஜி.கே.வாசன்

By: Monisha Tue, 10 Nov 2020 11:32:39 AM

கல்வி கூடங்களை திறப்பதை தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போட வேண்டும்; ஜி.கே.வாசன்

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வருகிற 16-ந் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பள்ளி திறப்பது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருப்பதாவது:-

பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களோடு கருத்துக் கேட்கக்கூடிய கூட்டம் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு பெரும்பான்மையான முடிவுகளுக்கு எற்றவாறு வருகிற 16-ந்தேதி அன்று பள்ளி திறக்குமா? இல்லையா? என்று தெரிய வரும் என்று அறிவித்து இருக்கிறது.

இப்படி இருக்க கூடிய சூழலில் தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினரும், அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். கடந்த 7 மாதங்களாக கொரோனாவை கட்டுப்படுத்தும் பணி தமிழக அரசிற்கு மிகுந்த சவாலாக அமைந்திருந்தது.

gk vasan,schools,colleges,corona virus,government of tamil nadu ,ஜி.கே.வாசன்,பள்ளிகள், கல்லூரிகள்,கொரோனா வைரஸ்,தமிழக அரசு

இருப்பினும் தமிழக அரசு சுகாதாரத்துறையின் உயர் பணியினால் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி கொரோனாவை குறைக்க கூடிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஒருபுறம் பண்டிகை காலம், மறுபுறம் மழைக்காலம். இந்த இக்கட்டான சூழலில் பெற்றோர்களுடைய மனநிலை, கல்வி கூடங்களை திறக்க ஆதரவும், எதிர்ப்பும் கூடுதலாகவோ, குறைந்தளவோ சதவிகிதம் இருந்தாலும் கூட, சுகாதார நலன் கருதி மக்களின் அச்சத்தை போக்க, மாணவர்கள் பாதுகாப்பை கருதி தற்பொழுது தமிழக அரசு கல்வி கூடங்களை திறப்பதை தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போட வேண்டும்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கூட பள்ளி, கல்லூரிகள் திறந்ததின் விளைவு கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பதிலாக மீண்டும் சவாலையும், தாமதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக அரசு, பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதை தள்ளிப் போட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :