Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

By: Monisha Thu, 10 Dec 2020 4:19:06 PM

கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைக்கிராமங்களில் பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி நகருக்கு குடிநீர் வழங்கும் 36 அடி உயரம் கொண்ட புதிய அணையின் நீர்மட்டம் 28 அடியை எட்டியது. அதேபோல 21 அடி உயரம் கொண்ட பழைய அணையின் நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்தது. அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் இந்த அணைகள் நிரம்பும் சூழ்நிலை உள்ளது. மேலும் கூக்கால் அணை நிரம்பி, தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது.

rain,wind,dam,poles,snow ,மழை,காற்று,அணை,மின்கம்பங்கள்,பனி

மழை காரணமாக கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 27 வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக கூக்கால் கிராமத்தில் 18 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இந்த மழைக்கு நேற்று அதிகாலை நகர் பகுதியில் பர்ன்ஹில் சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் மூன்று மின்கம்பங்கள் சேதமடைந்து மின் தடை ஏற்பட்டது.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்தனர். மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையும் மிகவும் குறைவாக இருந்தது. மேலும் கொடைக்கானல் மலைப்பாதையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.

Tags :
|
|
|
|