Advertisement

செப்டம்பர் 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்க தயார்

By: Monisha Thu, 27 Aug 2020 09:21:18 AM

செப்டம்பர் 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்க தயார்

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படலாம் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில் மாநில அரசிடம் இருந்து எப்போது அனுமதி கிடைத்தாலும் ரெயில்களை இயக்க தயார் நிலையில் இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

அரசு உத்தரவு வந்தால் செப்டம்பர் 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம். மெட்ரோ ரெயில்கள் தயார் நிலையில் உள்ளன. பயணிகளை பாதுகாப்பான முறையில் கையாள்வதற்காக சமூக இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்கும் வகையில் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்பாரங்கள் உள்ளிட்ட ரெயில் ஏறும் இடம் மற்றும் ரெயில்களின் உள்பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் வட்ட வடிவில் குறியீடுகள் வரையப்பட்டு வருகிறது.

chennai,metro train,community gap,disinfectant,refrigeration facility ,சென்னை,மெட்ரோ ரெயில்,சமூக இடைவெளி,கிருமி நாசினி,குளிர்சாதன வசதி

சமூக இடைவெளியை பயணிகள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகள் இயக்கத்தை கண்காணிக்க முடியும். அத்துடன் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் நுழைவு வாசலில் தேவைக்கு ஏற்ப வெப்பநிலை பரிசோதிக்கும் கருவிகளும், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால் ரெயில் நிலையங்களில் வழக்கமாக ரெயில் நிறுத்தும் நேரத்தை விட கூடுதலாக நிறுத்தும் நேரமும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நோய் தொற்று பரவாமல் இருக்க குளிர்சாதன வசதி (ஏ.சி.) பயன்பாடு தவிர்க்க அரசு அறிவித்து உள்ளது. ஆனால் மெட்ரோ ரெயில்கள் அனைத்திலும் குளிர்சாதன வசதி செய்திருப்பதால், மீண்டும் ரெயில்கள் இயக்குகின்ற போது குளிர்சாதன வசதியை எப்படி தவிர்ப்பது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Tags :