Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெட்டுக்கிளிகளை பிடிக்க கொசுவலை; வேளாண் அதிகாரிகளின் டெக்னிக் வேலைக்கு ஆகவில்லை

வெட்டுக்கிளிகளை பிடிக்க கொசுவலை; வேளாண் அதிகாரிகளின் டெக்னிக் வேலைக்கு ஆகவில்லை

By: Nagaraj Fri, 21 Aug 2020 12:19:11 PM

வெட்டுக்கிளிகளை பிடிக்க கொசுவலை; வேளாண் அதிகாரிகளின் டெக்னிக் வேலைக்கு ஆகவில்லை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சோளம் மற்றும் மாட்டுத்தீவனப் பயிர்களை வேட்டையாடிய ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகளை பிடிக்க கொசுவலையுடன் வேளாண்துறை அதிகாரிகள் களம் இறங்கினர். பல மணி நேரம் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் வெட்டுக்கிளிகளிடம் பலிக்காமல் போனது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த புதூரைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவரது தோட்டத்திற்குள் புகுந்த ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அங்கு அரை ஏக்கரில் பயிரிட்டப்பட்டிருந்த சோளப்பயிர்களை தின்று அளித்து விட்டதாக தகவல் வெளியானது. அங்குள்ள வெட்டுக்கிளிகளை பிடித்து ஆய்வு செய்ததில் அவை உள்நாட்டு வெட்டுக்கிளிகள் தான் என்றும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் விவசாயிகளுக்கு அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் புதூரில் கால்நடை தீவனப்பயிர் பயிரிடப்பட்ட தோட்டத்திற்குள் புகுந்து வெட்டுக்கிளிகள் பயிர்களை வேட்டையாட தொடங்கியதால், அவற்றின் அட்டகாசம் குறித்து மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கொசுவலையுடன் வந்த வேளாண் அலுவலர்கள், வலை விரித்துப் பிடித்தபடி தோட்டத்தின் ஒரு பக்கத்தில் நின்று கொண்டு, மற்றவர்களை தோட்டத்திற்குள் இறங்கி வெட்டுக்கிளிகளை விரட்டி வரும்படி கூறினர்.

agriculture officials,mosquito nets,crops,farmers,locusts ,
வேளாண் அதிகாரிகள், கொசு வலை, பயிர்கள், விவசாயிகள், வெட்டுக்கிளிகள்

அவர்கள் ஆடு மாடுகளை விரட்டுவது போல சத்தமிட்டபடியே விரட்டி வந்து பார்த்தனர். வலையில் எதுவும் சிக்கியதாக தெரியவில்லை. அத்தனை வெட்டுக்கிளிகளும் தோட்டத்துக்குள்ளேயே பதுங்கி கொண்டு, இவர்களின் சல சலப்புக்கு அஞ்சாமல், தொடர்ந்து மாட்டுத்தீவனப் பயிர்களை வேட்டையாடியபடி இருந்தன.

வெற்று வலையுடன் மீண்டும் அதே இடத்தில் நின்றபடி வெட்டுக்கிளிகளை வலையைத் தேடி வரவைக்க 5 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின. வேளாண் அலுவலர்களின் இந்த வினோத டெக்னிக் கைகொடுக்காமல் போன நிலையில், கையால் பிடித்த 30 வெட்டுக்கிளிகளை மட்டும் பாட்டில் ஒன்றில் ஒன்று அடைத்து ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

கொசுவலையைக் கொண்டு வெட்டுக் கிளிகளைப் பிடிப்பது வியட்னாம் நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் முறை என்றும், தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் புகுந்தால் வியட்நாம் பாணியில் கொசுவலையுடன் நின்று பிடிக்குமாறும் அறிவுரை வழங்கிச்சென்றனர்.

agriculture officials,mosquito nets,crops,farmers,locusts ,
வேளாண் அதிகாரிகள், கொசு வலை, பயிர்கள், விவசாயிகள், வெட்டுக்கிளிகள்

உண்மையில் வியட்னாம் நாட்டில் இப்படித்தான் வெட்டுக்கிளிகள் பிடிக்கப்படுகின்றனவா என்று ஆய்வு செய்த போது வேளாண் துறையினரின் சோம்பல் தனம் வெளிச்சத்திற்கு வந்தது. வியட்நாமில், வயல் வெளிகளில் உள்ள வெட்டுக்கிளிகளை சமைத்து உண்பதற்காக கொசுவலைகளை வைத்து பிடிப்பது அவர்களது வழக்கம். அந்தவ கையில் பெரிய அளவிலான கொசு வலைகளை பிடித்தபடி இருவர் வயல் முழுவதும் விடாமல் தொடர்ச்சியாக ஓடிச்சென்று வெட்டுக்கிளிகளை வலையில் சிக்க வைக்கின்றனர்

ஆனால் இங்கோ, ஒரே இடத்தில் நின்று கொண்டு வெட்டுக்கிளிகளை ஆட்டுக்குட்டிகள் போல தங்கள் வலைக்குள் வரவைக்க நினைத்ததால் வெட்டுக்கிளிக்கு விரித்த வலை வெற்றாகிபோனது என்கின்றனர் விவசாயிகள். அதே நேரத்தில் வெட்டுக்கிளிகளின் வேட்டைக்காடாக தமிழக விவசாய நிலங்கள் மாறுவதற்கு முன்பாக வேளாண் அதிகாரிகள் உருப்படியான நடவடிக்கை மேற்கொண்டு வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

Tags :
|