Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் தொடக்கம்

மதுரையில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் தொடக்கம்

By: Monisha Wed, 09 Dec 2020 09:34:52 AM

மதுரையில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் தொடக்கம்

உலகம் முழுவதும் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்து உள்ளன. இங்கிலாந்து, ரஷியா போன்ற நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. சில நிறுவனங்கள் அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. எனவே நமது நாட்டிலும் இன்னும் ஓரிரு மாதங்களில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. அதற்கிடையில் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி கொரோனா தடுப்பூசிகளை கையாள்வதற்கு டெல்லி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏனென்றால் அந்த விமான நிலையங்களில் அதிக அளவிலான தடுப்பூசிகளை கையாள்வதற்கு தேவையான குளிரூட்டப்பட்ட மையங்கள் உள்ளன. அங்கிருந்து நாடு முழுவதும் தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசியை 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு கீழ் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக வைப்பதற்கான மையங்களை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது.

corona,vaccine,protection,cooler,facility ,கொரோனா,தடுப்பூசி,பாதுகாப்பு,கூலர்,வசதி

மதுரையில் இந்த மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம் எதிரில், தடுப்பூசி பாதுகாப்பு மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில்தான் மதுரை மற்றும் அக்கம்பக்கத்து மாவட்டங்களுக்கு தேவையான தடுப்பூசி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் தான் கொரோனா தடுப்பூசிகளை வைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன. பொதுவாக அதிக அளவிலான தடுப்பூசிகளை அதன் வெப்ப டிகிரிக்கு ஏற்ப வாக்-இன்-கூலர் என்ற எந்திரத்தில் தான் பாதுகாப்பாக வைப்பார்கள். மதுரையில் இந்த மையத்தில் உள்ள கூலரில் 10 லட்சம் டோஸ் மருந்தினை பாதுகாப்பாக வைக்க முடியும்.

ஏற்கனவே இங்குள்ள தடுப்பூசிகளுடன், கொரோனா தடுப்பூசியையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதல் கூலர்களையும் அங்கு வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சேமிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு ஏர்கூலர் வாகனங்களில் அனுப்பி வைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 88 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகளை வைப்பதற்கான சிறிய அளவிலான கூலர்கள் உள்ளன. எனவே இந்த கூலர்களில் கொரோனா தடுப்பூசி வைக்கப்பட்டு அரசின் அறிவுரைப்படி நோயாளிகளுக்கு அளிக்கப்படும்.

Tags :
|
|