Advertisement

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது!

By: Monisha Tue, 11 Aug 2020 12:54:56 PM

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது!

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி, அவலாஞ்சி, குந்தா, கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகள் உள்ளன. பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 100 அடியை தாண்டி உள்ளது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 604 கன அடி தண்ணீர் வந்தது.

bhavani sagar dam,heavy rains,irrigation,floods,farmers ,பவானிசாகர் அணை,பலத்த மழை,பாசனம்,வெள்ளம்,விவசாயிகள்

அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.45 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் வினாடிக்கு 700 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும் என மொத்தம் 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர் மாலை 4 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 795 அடியாக அதிகரித்தது. இதனால் அணையில் நீர்மட்டம் 100.48 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டி விடும் என்பதால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Tags :
|