Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புரெவி புயல் எதிரொலியால் மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

புரெவி புயல் எதிரொலியால் மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

By: Monisha Thu, 03 Dec 2020 3:06:08 PM

புரெவி புயல் எதிரொலியால் மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு இலங்கையில் கரை கடந்த புரெவி புயல் நாளை பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் நெருங்கி வருவதையொட்டி மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறும் பெரியார் பேருந்து நிலைய பகுதிகள், 4 மாசி வீதிகள், மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகள், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், புதூர், கடச்சனேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பல பகுதிகள் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

storm,rain,water,stagnation,warning ,புயல்,மழை,தண்ணீர்,தேக்கம்,எச்சரிக்கை

இன்று காலையும் மதுரையில் சாரல் மழை பெய்தது. இதேபோல் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மேலூர், ஒத்தக்கடை, அழகர் கோவில், சமயநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்தது. புயல் எதிரொலியால் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை வைகை நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது ஏ.வி. பாலம் கீழுள்ள தரைப்பாலம், ஒபுளா படித்துறை தரை பாலத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. எனவே அந்த பகுதியில் பேரிகாட் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். தொடர்ந்து கரையோரப்பகுதிகளில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுரை மாவட்டத்தில் மொத்தம் 265.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags :
|
|
|