Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பரவலாக மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

By: Monisha Sat, 05 Dec 2020 3:10:39 PM

தமிழகத்தில் பரவலாக மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 24-ந் தேதி வங்கக்கடலில் உருவான நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட 18 வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது புரெவி புயல் உருவாகி தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்த புயல் தென் மாவட்டங்களில் கன மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களை நோக்கி புயலின் திசை திரும்பியது. இந்த புயல் மன்னார் வளைகுடா அருகே வந்தபோது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. அதனால் காற்றின் வேகம் குறைந்து டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர் வரையிலான வட மாவட்டங்களிலும் மிககனமழை பெய்தது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நிலவி வருகிறது. ராமநாதபுரம் அருகே 40கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இன்று அது மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து கேரள பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

depression,monsoon,storm,heavy rain,meteorological center ,காற்றழுத்தம்,பருவமழை,புயல்,கனமழை,வானிலை ஆய்வு மையம்

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழையும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் நாளை வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|