Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By: Monisha Mon, 20 July 2020 6:15:38 PM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வராத வகையில் மடம் சோதனைச்சாவடியில் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

cauvery,rain,mettur dam,irrigation,hogenakkal ,காவிரி,மழை,ஒகேனக்கல்,மேட்டூர் அணை,நீர்வரத்து

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீடித்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 535 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 588 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீர்வரத்தை விட தண்ணீர் திறக்கும் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 70.65 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 69.99 அடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|