Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆடிப்பெருக்கு விழாவிற்கு அனுமதி கிடைக்குமா: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆடிப்பெருக்கு விழாவிற்கு அனுமதி கிடைக்குமா: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

By: Nagaraj Mon, 27 July 2020 4:13:42 PM

ஆடிப்பெருக்கு விழாவிற்கு அனுமதி கிடைக்குமா: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆடிப்பெருக்கு விழாவிற்கு அனுமதி கிடைக்குமா?... ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றின் கரையோர பகுதிகளில் புனித நீராட, அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொது மக்கள் உள்ளனர்.

தமிழர்களின் முக்கிய திருவிழாவான, ஆடிப்பெருக்கு விழா வரும் ஆக.,2ல் கொண்டாடப்பட உள்ளது. அதில், காவிரியாற்று பகுதிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடுவர். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில், காவிரியாறு பகுதிகளான வேலாயுதம்பாளையம், புகளூர், வாங்கல், நெரூர் மற்றும் மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை பகுதிகளில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்படும்.

அதேபோல், அமராவதி அணையில் இருந்து ஆக., 2க்குள் ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் பட்சத்தில், கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணையிலும், பொதுமக்கள் குளிப்பர். அப்போது, புதுமண தம்பதிகள், ஆற்றில் முளைப்பாரியை விட்டு சுவாமியை வழிபட்டு, சுமங்கலி பெண்கள், ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு கட்டி கொள்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

curfew order,audit,permit,anticipation ,ஊரடங்கு உத்தரவு, ஆடிப்பெருக்கு, அனுமதி, எதிர்பார்ப்பு

ஆனால், வைரஸ் தொற்று, காவிரியாறு செல்லும் பல்வேறு மாவட்டங்களில் பரவி வருகிறது. இதனால், வரும் ஆடிப்பெருக்கின் போது, காவிரியாற்றில் புனித நீராட அனுமதி கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போது, கடந்த ஆடி அமாவாசைக்கு காவிரியாற்று பகுதிக்கு செல்ல, பல மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், கரூர் மாவட்டத்தில் தடை விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வழக்கம் போல், காவிரியாற்று பகுதிகளுக்கு சென்று வந்தனர். தற்போது, காவிரியாற்றில் வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும், 31 ல் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டால், வரும், 2 ல் ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாட தடையில்லை.

ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், ஆடிப்பெருக்கு விழா ஞாயிறுக்கிழமை வருவதால், பொது முடக்கம் இருக்கும் பட்சத்தில் அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்படும்' என்றனர்.

Tags :
|
|