Advertisement

டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்கு வைத்தது சென்னை அணி

By: Nagaraj Sat, 17 Oct 2020 10:53 PM

டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்கு வைத்தது சென்னை அணி

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து ஆட்டத்தில் அதிரடி காண்பித்து 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து அளிக்குமா என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணியின் அதிரடி தொடருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணியில் இந்த முறையும் பாப் டு பிளெஸ்ஸியுடன் சாம் கரணே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆனால், இம்முறை ரன் ஏதும் எடுக்காத நிலையில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதன்பிறகு, வாட்சன் களமிறங்கினார். இருவரும் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், படிப்படியாக ஸ்கோரை உயர்த்தினர். இதனால், ரன் ரேட் 7-ஐத் தொட்டது.

chennai team,thermal flying,ipl,crisis ,சென்னை அணி, அனல் பறக்கும், ஐ.பி.எல், நெருக்கடி

இந்த நிலையில், டு பிளெஸ்ஸி இந்த தொடரில் மற்றுமொரு அரைசதத்தை எட்டினார். ஆனால், அடுத்த பந்திலேயே வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு அதிரடி காட்டத் தொடங்கினார். ஆனால், டு பிளெஸ்ஸி 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

தோனி 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் ராயுடு தொடர்ந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து அதிரடி காட்டினார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜாவும் மைதானத்தைவிட்டு வெளியே சிக்ஸர் அடித்து ராயுடுவுடன் அதிரடியில் இணைந்தார்.

இதனால், ஓவருக்கு குறைந்தபட்சம் 10 ரன்கள் என்ற வீதத்தில் ரன்கள் கிடைத்தது. ரபாடா வீசிய 19-வது ஓவரில் ராயுடு மற்றும் ஜடேஜா தலா 1 சிக்ஸர் அடிக்க 16 ரன்கள் கிடைத்தன. நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் ஜடேஜா 2 சிக்ஸர்கள் அடித்து மிரட்ட அதிலும் 16 ரன்கள் கிடைத்தன.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 25 பந்துகளில் 45 ரன்களும், ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர். தில்லி தரப்பில் நோர்க்கியா 2 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே மற்றும் ரபாடா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags :
|