பொய்யாமுடி விநாயகர் கோயிலில் அத்திவரதர் மாதிரி சிலை காட்சிப்படுத்தல்

அத்திவரதர் மாதிரி சிலை ஒன்று காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் தெருவில் உள்ள பொய்யாமுடி விநாயகர் கோயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு அத்திவரதர் எழுந்தருளினார். அவரை 3 கோடி பேர் தரிசனம் செய்தனர். இந்த தரிசனம் கடந்த 2019 ஆகஸ்ட் 17-ம் தேதி நிறைவுற்று, அத்திவரதர் மீண்டும் நீராழி மண்டபத்தில் சயனித்தார்.

இந்நிலையில், அத்திவரதர் மாதிரி சிலை ஒன்று காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் தெருவில் உள்ள பொய்யாமுடி விநாயகர் கோயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தச்சிலையின் முகம் மட்டும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் காகிதக் கூழ் உள்ளிட்ட சில பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டு உள்ளன.

கடந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் இந்த சிலை சயனகோலத்தில் வைக்கப்பட்டது. இந்த ஆண்டுநின்ற கோலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நாளை வரை மட்டுமே காட்சிக்கு வைக்கப்படும். அதன் பிறகு பிரித்து பாதுகாக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் இந்தச் சிலையை காட்சிக்கு வைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.