திருப்பதி அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையதளத்தில் விநியோகம்

திருப்பதி : ஆந்திராவில் உள்ள பிரசதிப்பெற்ற வழிபாட்டு தளமான திருமலை ஏழுமலையான் கோவில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து தரிசனம் செய்வர்கள். மேலும் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் சேவைகளுடன் கூடிய தரிசனம் என பல முறைகளில் தரிசன டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான டிக்கெட் முன் பதிவு எல்லாம் முடிந்துள்ளது.

இந்த நிலையில் நாளை காலை (ஜூலை 24) முதல் இலவச அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையதளத்தில் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாலையில் செய்யப்படும் அங்கப்பிரதட்சணம் பெருமாளின் அருளை பெற்று தரும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அங்கப்பிரதட்சணம் முடிந்ததும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் சிறப்பு தரிசனம் போல விரைவாக சுவாமி தரிசனம் செய்யப்படும். அதனால் பல பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாதம் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையம் மூலம் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன் படி நாளை (ஜூலை 24) முதல் காலை 11 மணிக்கு இதற்கான ஆன்லைன் கவுன்ட்டர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்த அனைத்து தினங்களுக்கும் தலா 1,500 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். இதில் பெண்களுக்கு 750 ஆண்களுக்கு 750 என இலவச டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.