நாளை காலை ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியீடு

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் ரூ.300 நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.


திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட் வழங்கப்படும். தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நீண்ட வரிசையில் காத்திருந்து அவதிப்பட்டனர்.

இதனால், இலவச தரிசனத்துக்கு டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த தேவஸ்தான அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் 25,000 பக்தர்களும், மற்ற நாட்களில் 15,000 பக்தர்களும் தரிசனம் செய்ய அலிபிரியில் உள்ள பூதேவி வளாகம், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம், பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட 3 இடங்களில் இலவச தரிசன நேரம் மற்றும் டோக்கன்களை தேவஸ்தான அதிகாரிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இலவச தரிசனத்துக்கு நேர ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடிகிறது. திருப்பதிக்கு நேற்று 66,946 பேர் வருகை தந்துள்ளனர். 26,990 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல்கள் வசூல் ஆகியுள்ளது.