குடவரை விநாயகருக்கு 5 மாதத்திற்கு பிறகு சங்கடஹர சதுர்த்தி பூஜை

சிறப்பு பூஜைகள்... சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு குடவரை விநாயகருக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி மலையில் மூன்றாவது மண்டபத்திற்கு அடுத்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்புறம் ஒரே பாறையினுள் செதுக்கப்பட்டுள்ள குடவரை விநாயகருக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு சங்கடஹர சதுர்த்தியையொட்டி பால், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் வைத்து நைவேத்தியம் படைக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டன. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து வந்த மக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.