திருப்பதி அன்னதான நன்கொடை உயர்வு

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத நன்கொடை திட்டத்தை செயல்படுத்தி கொண்டு வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் நன்கொடை வழங்கி கொண்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் தினமும் திருமலையில் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் இலவசமாக உணவு உண்டு வருகின்றனர்.

மேலும் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள், பஸ் நிலையம், மாதவம், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதிகள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் என பல்வேறு இடங்களில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே இதற்காக நன்கொடை வழங்குவோர் இதுவரை 1 நாளைக்கு ரூ.33 லட்சம் வழங்கி வந்தனர். இந்த நிலையில், விலைவாசி உயர்வால் அன்னதான நன்கொடை ரூ.38 லட்சமாக உயர்த்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்து உள்ளது.

இதையடுத்து இதன் மூலம் சிற்றுண்டிக்காக ரூ.8 லட்சம் மற்றும் மதிய மற்றும் இரவு உணவுக்காக தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.38 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் ஒவ்வொரு வேளைக்கும் தனித்தனியாகவும் நன்கொடை வழங்கலாம் என கூறப்பட்டு உள்ளது.