மழைக்காலத்தில் கூந்தலை பராமரிக்க உங்களுக்கு சில யோசனைகள்

சென்னை: மழைக்காலத்தில் எப்படி நம் சருமத்தை பாதுகாக்கனுமோ அதே மாதிரி நம்முடைய கூந்தலையும் பாதுகாப்பது மிகவும் அவசியம். மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் நம் தலைமுடி அதிகளவில் பாதிப் படைகிறது. மழைநீரில் உள்ள அமிலத்தன்மையும் நம் கூந்தலை அதிகளவில் பாதிக்கிறது.


மழைக்காலத்தில் ஈரப்பதம் எண்ணெய் பசை எல்லாம் சேர்ந்து கூந்தல் அழுக்கடைய வாய்ப்பு உள்ளது. எனவே மழைக் காலத்தில் கூந்தலை பிரத்யேகமான முறையில் பராமரிப்பது அவசியம். இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் ஹேர் பேக்குகள் கூந்தலுக்கு நிறைய நன்மைகளை நமக்கு வழங்குகிறது.

2 டீஸ்பூன் வேம்பு பொடி மற்றும் 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து ஒரு மென்மையான பேஸ்டாக கலந்து ( உங்கள் கூந்தலின் நீளத்துக்கேற்ப வேண்டிய அளவு) உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தாராளமாக தடவி வர வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் அதை உலர விட வேண்டும்.

உளுந்தம் மாவு உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், வேம்பு தலையில் உள்ள பொடுகை போக்கவும் உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரும் போது பளபளப்பான கூந்தலை பெற முடியும்.

ஆரோக்கியமற்ற கட்டுக்கடங்காத கூந்தலுக்கு இந்த ஹேர் பேக் உதவுகிறது. தயிர் - 1 கப், எலுமிச்சை - 2 டீஸ்பூன் மற்றும் கடுகு எண்ணெய் - 2 டீஸ்பூன் கலந்து அதை தலையில் தடவிக் கொள்ள வேண்டும். இதை தலையில் தடவி உலர வைத்து பின்னர் வெந்நீரில் அலசி கொள்ளுங்கள்.

பிறகு சில செம்பருத்தி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து நன்றாக அரைத்து அதில் எலுமிச்சை ஒன்றை பிழிந்து தலையில் தடவிக் கொள்ளுங்கள். சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு லேசான ஷாம்பு கொண்டு கழுவி வாருங்கள்.