உதடுகளை அழகாகவும், மென்மையாகவும் வைக்க இயற்கை குறிப்புகள்!

ஒருவரின் அழகை அதிகரிப்பதில் உதடுகள் முக்கிய பங்கு வகிகின்றன. ஆனால் பலருக்கு உதடுகள் பொலிவிழந்து, அடிக்கடி வறட்சியாகிறது. இப்படி உதடுகள் வறட்சியாவதற்கு காலநிலை ஒரு காரணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடான டீ மற்றும் காபியும் மற்றொரு காரணமாக உள்ளன. ஏனெனில் இவை உதடுகளில் உள்ள ஈரப்பசையை போக்குவதுடன், உதடுகளை மென்மையிழக்கச் செய்து, கருமையாக மாற்றுகின்றன. எனவே காபி, டீ போன்றவற்றை சிறிது குளிர வைத்து குடியுங்கள்.

இவை மட்டுமின்றி, அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பதும் உதடுகளை வறட்சியடையச் செய்து, பின் அதன் மென்மையை இழக்கச் செய்துவிடும். இந்த பதிவில், உதடுகளை அழகாகவும், மென்மையாகவும் வைக்க உதவும் சில இயற்கை குறிப்புகளை பார்க்கலாம்.

லிப் பாம்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக தேன் விளங்கும். ஏனெனில் தேனில் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது உதடுகளுக்கு தடவி வந்தால், ஒரு வாரத்தில் உதடுகளில் நல்ல மாற்றத்தைக் காணலாம். வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.

கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.