தலையில் அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. வழிய வழிய எண்ணெய் தேய்த்து, சீவி கொண்டால் முடியே கொட்டாது என்று எண்ணுவது முட்டாள்தனம் என்றே கூற வேண்டும். அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு.

கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது மிகவும் நல்லது. அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் அதுவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும். அதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.

கூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டு விட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும். தலையின் சருமமானது இயற்கையாகவே, தலையில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக ஒருவித எண்ணெய் பசையை உற்பத்தி செய்யக்கூடியது. ஆனால், நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயை அப்படியே விடுவதால் தலையில் அதிகப் படியான எண்ணெய் பசை சேரக்கூடும். அதனால், முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படக்கூடும்.

தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும். அதிகப் படியான எண்ணெய் பசை தலையில் சேருவதால் தான் முகத்தில் பரு போன்ற பிரச்சனை உருவாகிறது. போதுமான அளவு எண்ணெய் தேய்த்தால் மட்டுமே கூந்தல் ஈரப்பதத்தை ஈர்த்துக் கொள்ளும். ஒருவேளை எண்ணெய் அதிகமாகி விட்டால் உடனே துடைத்து விடுங்கள்.