சருமத்தை பொலிவாக்கி அழகான மேனிக்கு உறுதுணையாகும் அரிசி!

சென்னை: அழகின் ரகசியத்திற்கு அரிசியும் துணைபுரிகிறது. சருமத்திற்கு அது ஏராளமான நன்மைகளை தருகிறது. அரிசி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. அதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் சரும அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் தோன்றுவதற்கு அரிசி உணவை குறைக்குமாறு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அழகு ரகசியத்திற்கு அரிசியும் துணைபுரிகிறது. சருமத்திற்கு அது ஏராளமான நன்மைகளை தருகிறது.

குறிப்பாக விரைவிலேயே வயதான தோற்றம் உண்டாவதை அரிசி உணவுகள் தடுக்கிறது. சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் செய்கிறது. அரிசியில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. சரும ஆரோக்கியத்திற்கு அரிசி நீரும் முக்கிய பங்காற்றுகிறது.

அரிசியை ஊறவைக்கும் தண்ணீரையும், சாதத்தை வடித்த தண்ணீரையும் அழகுக்கு பயன்படுத்தலாம். அதனை தலைமுடி மற்றும் முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும். இந்த அரிசி நீரை பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் 10 நாட்கள் வரை வைத்தும் அழகுக்கு பயன்படுத்தலாம்.

பொடுகு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அவகெடாவைஅரிசி நீரில் அரைத்து தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். சரும சுருக்கங்களை போக்குவதற்கு அரிசி மாவுடன் சம அளவு பொடித்த பாதாம், தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி வரலாம்.

முகத்தில் புள்ளிகள், தழும்புகள் இருந்தால் அதனை போக்குவதற்கு ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் அதே அளவு கடலை மாவு, சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூச வேண்டும். மாவு கலவை உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தால் அழகில் பொலிவு ஏற்படும்.