சருமம், கூந்தலுக்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது மிகவும் அவசியம்

சென்னை: குளிர்காலத்தில், சருமம் மற்றும் கூந்தலுக்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது மிகவும் அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம். குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைச் சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும்.

எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம். அதே போல், மூலிகை சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது.

குளிர்காலத்தில், கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து, பின்னுவது அல்லது கொண்டை போடுவது ஆகியவற்றை செய்யலாம். இதனால், குளிர்ந்த காற்றால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படும்.

சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையால் மட்டுமல்ல, நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக, சருமத்தை ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது.

தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகின்றன. குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பராமரிக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம்.