சருமம் வறண்டு தோல் உரிகிறதா? இதோ இருக்கு இயற்கை டிப்ஸ்!

வறட்சியான சருமம் உள்ளவர்கள் தோல் உரிவது, எண்ணெய் பசையின்றி சருமம் சுருக்கங்களுடன் அசிங்கமாக காணப்படுவது போன்றவை முக்கியமான பிரச்சனைகளை சந்திக்கின்றன. இந்த பதிவில் வறட்சியான சருமம் உள்ளவர்களின் முகத்தில் தோல் உரியாமல் எப்போதும் எண்ணெய் பசையுடன் வைத்துக் கொள்ள ஒருசில இயற்கை குறிப்புகளை பார்ப்போம்.

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் இயற்கையாகவே எண்ணெய் பசையானது இருப்பதுடன், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அதனை தினமும் சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், தோல் உரிதலுக்கு காரணமான நுண்ணுயிரிகளை அழித்து, தோல் உரிதலைத் தடுக்கும். மேலும் தயிர் சருமத்தின் அழகை அதிகரித்து வெளிக்காட்டும்.

கற்றாழை ஜெல்லை வறட்சியான சருமத்தினர் தங்கள் சருமத்தில் பயன்படுத்தினால், அவை வறட்சியை போக்குவதுடன், சருமத்தில் எண்ணெய் பசையை தங்க வைப்பதுடன், இரத்த ஓட்டம் சீராக செல்லவும் உதவி புரியும்.

தேங்காய் எண்ணெய் கூட தோல் உரிதலை தடுக்கும். அதிலும் இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெயைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து உறங்கினால், தோல் உரிவது குறைந்து, சரும வறட்சியும் நீங்கும்.

வாழைப்பழத்தை மசித்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், சருமத்தில் உள்ள வறட்சி நீங்குவதுடன், சருமம் மென்மையாக இருக்கும்.