முடி உதிர்தல், இளநரை, பேன் தொல்லையை போக்க சில ஆலோசனை

சென்னை: பிரச்சினைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இள்நரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.

கூந்தல் உதிர்வு: தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

இளநரை நீங்க: நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம். நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம்.

கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

பொடுகு நீங்க: வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம். இதே போல் வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும். செம்பட்டை மறைய •முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.