உங்கள் தலை வழுக்கை ஆகுவதை தடுக்க...ஆண்களே இதை ட்ரை பண்ணுங்க!

தலைப்பகுதியை, குறிப்பாக மண்டை ஓட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். தொலைதூர பயணங்கள் சென்று வந்தால் உடனடியாக குளியுங்கள். மண்டை ஓட்டுப் பகுதியையும் கழுவி சுத்தம் செய்யுங்கள்.

பொடுகு சாதாரண அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை. கூடுதலாக பற்றிப்பிடித்த நிலையில் இருந்தாலோ, சிவப்பாகவும்-தடித்தும் காணப்பட்டாலோ, அரிப்புத் தன்மை அதிகமாக தோன்றினாலோ, சரும நோய் டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

முடி நன்றாகவும், அடர்த்தியாகவும் காணப்பட வேண்டும் என்பதற்காக, விளம்பரங்களில் பார்த்த எண்ணெய், கிரீம், ஜெல், ஷாம்பு போன்றவைகளை பயன்படுத்தாதீர்கள். அவை இருக்கிற முடிக்கும் பாதிப்பை உருவாக்கிவிடலாம்.

உணவிலும் அதிக அக்கறை காட்டுங்கள். போதுமான அளவில் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் சத்துக்கள் குறைந்தால், அது முடி உதிர்தலுக்கு காரணமாகிவிடும்.

மன அமைதியும் தேவை. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை நினைத்து வருந்தி, புலம்பிக்கொண்டிருந்தால் மன அழுத்தம் தோன்றும். அதனாலும் முடி உதிரும். மன அழுத்தத்தை உங்களால் குறைக்க முடியாவிட்டால் அதற்குரிய நிபுணரின் கவுன்சலிங் பெறுங்கள்.

வழுக்கையை போக்குவதற்கு பலவிதமான சிகிச்சைகள் இருந்தாலும், அவைகளின் பலன் தாமதமாகத்தான் கிடைக்கும். அத்தகைய சிகிச்சைகளில் சில பின் விளைவுகளும் உண்டு.

ஆண்மை ஹார்மோனான ‘டை ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரான்’ தாக்கமே, வழுக்கைக்குக் காரணமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் மருந்தினை கொடுக்கும்போது முடி உதிர்வது குறையும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இந்த மருந்தினை சாப்பிட்டால்தான் ஓரளவாவது பலன் கிடைக்கத் தொடங்கும். ஆனால் இதற்கான மருந்தை அதிக நாட்கள் சாப்பிடும்போது ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படலாம். அவர்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதோடு, மன அழுத்தம் ஏற்படவும் இடமுண்டு.