இந்திய சந்தையில் பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்க இருப்பதாக தகவல்

லடாக் மோதலுக்கு பின் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீங்கலாம் என இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் இணை மேலாளர் பணிக்கு ஆட்களை தேடுவதாக லின்க்டு-இன் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.

இதனால் பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை விரைவில் நீங்க வாய்ப்புகள் இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பப்ஜி வெளியிட்ட விவரங்களின் படி, கார்ப்பரேட் டெவலப்மென்ட் பிரிவு மேலாளர் பதிவிக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்வதாக தெரிவித்து இருக்கிறது. இந்த பதவியில் இருப்பவர் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையிலான முதலீடு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் உள்ளிட்டவைகளை மேற்கொள்வார்.

இந்த பணியில் சேர்பவர் பப்ஜி இந்தியாவுக்கான கட்டமைப்பு பணிகளை தென் கொரியாவில் செயல்படும் கிராப்டன் தலைமையகத்தின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளவார் என தெரிகிறது. இந்திய அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பதால், விரைவில் பப்ஜி மொபைல் இந்தியாவில் வெளியாகலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

இருப்பினும், லின்க்டு இன் பதிவில் பப்ஜி பிரிவுக்கே ஆட்கள் தேவை என பதிவிடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு கடந்த மாத துவக்கத்தில் பப்ஜி மொபைல் கேமிற்கு மட்டும் தடை விதித்தது. அந்த வகையில் இந்த கேம் தொடர்ந்து கணினி மற்றும் கேமிங் கன்சோல்களில் கிடைக்கிறது.