இந்தியாவில் விற்பனையாகும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விலையை உயர்த்த முடிவு

இந்தியாவில் விற்பனையாகும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மொ்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 6-7 மாதங்களாகவே யூரோவுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தே காணப்படுகிறது. இந்த நிலையில், இதர இடுபொருள் செலவினங்களும் கணிசமான அளவில் உயா்ந்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சில குறிப்பிட்ட மாடல் மொ்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலையை வரும் அக்டோபரிலிருந்து 2 சதவீதம் வரை உயா்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என மொ்சிடிஸ் பென்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

இதில் எந்தெந்த மாடல்களின் விலை உயா்த்தப்படும் என்பதை அந்த நிறுவனம் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடவில்லை. இருப்பினும், சி-கிளாஸ், இ-கிளாஸ், மற்றும் ஜிஎல்சி மாடல்களின் விலை ரூ.1.5 லட்சம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.