வோடபோன் ஐடியா நிறுவனம் ரீசார்ஜ் சலுகை கட்டணத்தை உயர்த்த திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்களை மீண்டும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், இழப்பை ஈடு செய்ய விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இந்திய டெலிகாம் சந்தையில் ரீசார்ஜ் கட்டணங்கள் விலை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக வோடபோன் ஐடியா தனது விலையை உயர்த்தலாம் என தெரிகிறது.

இதனை அடுத்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களின் பிரீபெயிட் ரீசார்ஜ் கட்டணங்களை கடந்த ஆண்டு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

இம்முறை வோடபோன் ஐடியா நிறுவனம் தனது நிதி நிலைமையை சரி செய்யும் நோக்கில் விலை உயர்வை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெயிட் சலுகை கட்டணத்தை உயர்த்தியது. இவை ஏர்டெல் நிறுவன சலுகைகளை விட 7 சதவீதம் அதிகம் ஆகும்.