ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை அறிக்கை

சென்னை: ஏமாந்திடாதீங்க... கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக கூறி, தற்போது எச்சரிக்கும் விதமாக, சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு, இவர் நடித்து , தயாரித்திருந்த 'விக்ரம்' திரைப்படம் சுமார் 450 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. பல வருடங்களுக்கு பின்னர், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது மட்டும் இன்றி, சில திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது

இந்நிலையில் சிம்புவை வைத்து ஒரு படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தையும் கமல் தயாரிக்க உள்ளார். இப்படி இவர் தயாரிக்கும் படங்களின் பெயர்களை வைத்து தான், சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கும் விதமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக, எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எவ்வகையிலும் உங்களை வந்தடைந்தாலும், அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.