ஒத்தாசைக்கு ஒத்த செருப்பை பயன்படுத்தினால்... நடிகர் பார்த்திபன் டுவிட்!

நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யாவுக்கு ஒரு பக்கம் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் ஒரு சிலர் மட்டும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்தவகையில் இந்து மக்கள் கட்சியின் துணை தலைவர் ஒருவர், சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருவதாக அறிவித்து இருந்தார்.

ஆனால் இந்த அறிவிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. தன்னை செருப்பால் அடித்து அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்றால் அதை ஒரு ஏழை மாணவனுக்கு தர நான் தயார் என்று சூர்யா கூறியதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் வெளிவந்தது.

இதுகுறித்து பார்த்திபன் தனது டுவிட்டரில், 'லட்ச ரூபாய் போட்டியில் அடிக்கச் சொல்ல ஆள் இருக்கு, வாங்கிக் கொண்டு அதை ஒரு மாணவருக்கு வழங்கவும் உயர்ந்த மனமிருக்கு, ஒத்தாசைக்கு ஒத்த செருப்பை பயன்படுத்தினால், அம்மாணவருக்கு கூடுதல் தொகை லட்சத்து ஒரு பைசாவை வழங்குவேன் என இம்முதலாம் ஆண்டின் நினைவில் அறிவிக்கிறேன்' என்று தெரிவித்தார். தனது 'ஒத்த செருப்பு' படத்தின் முதலாவது ஆண்டு நிறைவு ஆனதை அடுத்து இந்த டுவிட்டை அவர் பதிவு செய்தார்.

ஆனால் அதன் பின்னர் சூர்யா கூறியதாக வெளி வந்த தகவல் வதந்தி என்பதை அறிந்து மீண்டும் வருத்தம் தெரிவித்து ஒரு டுவிட்டை அவர் பதிவு செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- இன்றைய என் பதிவில் 'செருப்புச் செய்தி' ஆதாரமற்றது என நண்பர் வெங்கட் சுட்டிக்காட்டியுள்ளார். அப்படியிருப்பின் ஊர்ஜிதப் படுத்திக்கொள்ளாமல் பதிவு செய்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.