தயாரிப்பாளர்களே சம்பளத்தை முடிவு செய்கிறார்கள்; வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ்

கொரோனா ஊரடங்கு விடுமுறையை வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள பண்ணை வீட்டில் கழித்து வருகிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

பண்ணையில் உள்ள செடி கொடி மரங்களோடு பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறேன். சினிமா துறை முடங்கி உள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் நடித்த படங்களின் வியாபாரத்தை கணக்கில் வைத்தே சம்பளம் கொடுக்கிறார்கள். படம் வியாபாரம் ஆகவில்லை என்றால் அதிக சம்பளம் கொடுப்பது இல்லை.

கதாநாயகனின் மார்க்கெட்டை மனதில் வைத்து தயாரிப்பாளர்களே சம்பளத்தை முடிவு செய்கிறார்கள். யாரும் அதிக சம்பளம் தர வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது இல்லை. ரசிகர்களும் பெரிய நடிகர்கள் படங்களைத்தான் பார்ப்போம் என்ற மனநிலையில் இருந்து மாறி புதிய கதாநாயகர்களையும் வரவேற்க வேண்டும்.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதாக பேசுகிறார்கள். வாரிசு நடிகர்கள் திறமையும் உழைப்பும் இல்லாமல் முன்னுக்கு வர முடியாது. திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். எனவே வாரிசுகள் என்ற விமர்சனங்கள் தவறானது. இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.