3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு; நடிகர் சோனு சூட் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரிய பெரிய மாஸ் நடிகர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் அரசுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு அமைதியாக உள்ளனர். ஆனால் திரையில் வில்லனாக வரும் நடிகர் சோனு சூட் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்.

முதற்கட்டமாக ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தனது சொந்த செலவில் நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்தார். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்கள் மூலம் யாராவது உதவி என்று கேட்டால் அடுத்த நாளே அவர்களுக்கு அந்த உதவி போய் சேரும்.

சமீபத்தில், விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லாமல் இரண்டு மகள்களை ஏரில் பூட்டி உழுத நிலையில் அடுத்த நாளே அவருக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார். சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இழந்து காய்கறி வியாபாரம் செய்த இளம்பெண்ணுக்கு அடுத்த நாளே சாப்ட்வேர் இன்ஜினியர் பணி வாங்கி கொடுத்தார்.

இதேபோல் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்தியை அடிப்படையாக கொண்டு பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் சோனு சூட் தற்போது 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு மூன்று லட்சம் பேருக்கு வேலை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகவும் அந்த வேலையில் நல்ல சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ், ஆகியவை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சோனு சூட் அவர்களின் இந்த ஏற்பாடு காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் இந்த கொரோனா காலத்தில் மக்கள் மனதில் ஹீரோவாக சோனு சூட் இடம்பிடித்துள்ளார்.