தங்கலான் படத்திற்காக பயிற்சி செய்தபோது நடிகர் விக்ரமுக்கும் விலா எலும்பு முறிந்ததாக தகவல்

சென்னை: தங்கலான் படத்தின் பயிற்சியின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீயான் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் முதன்முறையாக பா.ரஞ்சித் – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. குறிப்பாக நடிகர் விக்ரம் உடல் எடை குறைந்து தன்னை வறுத்திக்கொண்டு தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ரசிகர்களை மிரள வைத்தார். கேஜிஎஃப் பின்னணியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பயிற்சியின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரமின் மேனேஜர் சூர்ய நாராயணன் கூறுகையில், “பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்துக்காக பயிற்சியில் ஈடுபட்டபோது அவரது விலா எலும்பு முறிந்தது.

அதனால் அவரால் தற்சமயம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது. உங்கள் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்தார். மீண்டும் குணமாகி வந்து பழையபடி அசத்துவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.