மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசின் அறிவிப்பை எதிர்பார்க்கிறேன்; நடிகர் விஷால்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு இல்லாமல் இருந்த நிலையில் மத்திய அரசு நேற்று திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி அளித்து அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு தமிழ் திரையுலகினர் உள்பட இந்திய திரையுலகினர் அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நடிகர் சங்க செயலாளரும் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் பிரபல நடிகருமான விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனையடுத்து மத்திய அரசு வழிகாட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து படக்குழுவினரும் படப்பிடிப்பை விரைவில் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். மேலும் படப்பிடிப்பை எப்பொழுது முதல் தொடங்கலாம் என்ற தேதியை விரைவில் தமிழக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துவிட்டதை அடுத்து மாநில அரசும் அனுமதி அளித்து விட்ட பின்னர் விஷாலின் 'துப்பறிவாளன் 2' உள்பட அனைத்து தமிழ் திரைப் படங்களின் படப்பிடிப்புகளும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.