பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரியும் கலந்துகொள்ளவில்லை!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் கடைசி புரமோவும் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

கடைசியாக கிடைத்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ரேகா, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, அனுமோகன், ஜித்தன் ரமேஷ், ஆஜித், கேப்ரில்லா, பாடகர் வேல்முருகன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த கிரண், ஷில்பா மஞ்சுநாத், பூனம் பஜ்வா, விஜே அர்ச்சனா, சம்யுக்தா, உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்சேதுபதியுடன் 7 படங்களில் ஜோடியாக நடித்த காயத்ரி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி காயத்ரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில திரை நட்சத்திரங்கள் மற்றும் விஜய் டிவியில் பிரபலமானவர்கள் மட்டுமே போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களை வைத்து விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை எப்படி பிரபலப்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.