‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் டுவிட்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும், பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த தலைவி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கியது. சுமார் 2 மாதம் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இது குறித்து நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், நாங்கள் வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான 'தலைவி'யின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம், எனக்கு ரத்தமும் சதையுமாக கிடைத்தது என்று கூறினார்.

மேலும் அவர், நான் அதை மிகவும் நேசித்தேன். ஆனால் திடீரென அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கலவையான உணர்ச்சிகள் மேலிடுகின்றன. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். 'தலைவி' படக்குழுவினருக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.