இரவு விருந்துக்கு வர மறுத்ததால் நடிகை வித்யாபாலன் படத்தின் படப்பிடிப்புக்கு தடை?

படப்பிடிப்புக்கு தடை விதிப்பு... மத்திய பிரதேச மாநில அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்தது என்று கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் முன்னணி நடிகை வித்யா பாலன் தற்போது 'ஷெர்னி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வித்யா பாலன் அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இரண்டு வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் படப்பிடிப்பு குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

அமைச்சரின் இரவு விருந்துக்கு நடிகை வித்யா பாலன் செல்ல மறுத்ததால் தான் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்த அமைச்சர் விஜய் ஷா, 'படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க என்னை அணுகினர். அவர்கள் தான் இரவு விருந்துக்கு என்னை அழைத்தனர். நான் மகாராஷ்டிரா வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தேன். படப்பிடிப்பை நிறுத்த நான் உத்தரவிடவில்லை' என்றார்.