விவாகரத்து குறித்து ஐஸ்வர்யா ராய்யின் அதிரடி பதில்

மும்பை: ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தனது அழகால் மட்டுமின்றி தனது நடிப்பு திறமையாலும் உருவாக்கியுள்ளார்.

அவர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆன பிறகும், ரசிகர்கள் அவர் மீதான அன்பை இழக்கவில்லை. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படமே அதற்கு சாட்சி. ஐஸ்வர்யா ராய் தனது அழகால் நினைத்ததை சாதிக்கும் கல்கியின் நந்தினி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார்.

1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுபடுத்தும் கனமான வேடம். அதை மிகச் சிறப்பாகக் கையாண்டிருப்பார்.

ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் டெண்டுல்கர் போன்று ஐஸ்வர்யாவும் இந்தியாவின் முகம் என்று உலகளவில் அறியப்படுகிறார். இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவில் பிரபல ஓப்ரா வின்ஃப்ரே தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.

இந்தியர்களின் முகமாக அறியப்படும் அவரிடம் அமெரிக்கர்கள் இந்தியர்களின் பார்வை குறித்து தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஐஸ்வர்யாவிடம் ஓப்ரா, ”நீங்கள் உங்கள் கலாச்சாரத்தின் பிரதிநிதியாக இங்கே இருக்கிறீர்கள். இந்தியர்கள் அமெரிக்க பெண்களை முரட்டுத்தனமானவர்கள் என நினைக்கிறார்களா?” என கேள்வி எழுப்பிய நிலையில், ”இல்லை, இந்தியர்கள் பொதுவாக விருந்தோம்பல் பண்பு நிறைந்தவர்கள்” என்றார்.

நாங்கள் அதிகம் பேசுபவர்கள் என இந்தியர்கள் நினைக்கிறார்களா? என ஒப்ரா கேட்க, அதற்கு ஐஸ்வர்யா, இருக்கலாம் என்றார். இறுதியாக, நாங்கள் அதிகம் விவாகரத்து செய்கிறோமா என ஒப்ரா கேட்க, அது விவாதிக்கக் கூடியதாக இருக்கலாம் என்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகும் நிலையில் ஐஸ்வர்யா ராய் அழகானவர் மட்டுமல்ல, புத்திசாலியும் கூட என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.