இரண்டாவது நாளில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய அறந்தாங்கி நிஷா

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே அசத்திய அறந்தாங்கி நிஷா நேற்று இரண்டாவது நாளிலும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றார். நேற்று போட்டியாளர்களின் சொந்த வாழ்க்கை குறித்து கூறும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பாடகர் வேல்முருகன், சனம்ஷெட்டி ஆகியோரை அடுத்து அறந்தாங்கி நிஷா அனைவரையும் கவரும் வகையில் காமெடியாகவும் நெகிழ்ச்சியாகவும் பேசினார்.

தான் சிறுவயதில் தனது கலரால் ஏற்பட்ட அவமானங்களை வரிசைப்படுத்தி கூறிய அவர், தான் நிறைய பேரை கலாய்ப்பதும் அந்த கலாய்ப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டதால் தான் இன்று தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் முதல் முதலாக விஜய் டிவியில் தான் ஆடிசன் சென்றபோது அழகுக்கும் திறமைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். என்னுடைய திறமைக்கு அங்கு நல்ல மரியாதை கிடைத்தது என்றும் தெரிவித்தார். மேலும் உன்னுடைய கருப்பு கலரை வைத்து உனக்குள்ளேயே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி கொள்ளாதே என்று எனக்கு நானே முடிவு செய்ததாகவும் அறந்தாங்கி நிஷா தெரிவித்தார்.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னர் எவ்வளவு அவமானங்கள் இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. அது என்னுடைய வாழ்வில் நிகழ்ந்தது என்றும் நிஷா கூறினார்.

நம்மிடம் இருக்கும் பலவீனத்தை நாம் பலமாக மாற்றினால் நம்மிடம் இருக்கும் பலவீனம் செத்துப் போய்விடும் என்று அறந்தாங்கி நிஷா கூறியதும் சக போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். சிவகார்த்தியன் அவர்கள் கூறியபடி 'நம்மை போன்றவர்கள் ஜெயித்தால் மட்டும் போதாது, ஜெயிச்சு கிட்டே இருக்கனும் என்று கூறியதை நான் என் மனதில் நினைத்துக் கொண்டேன் நம்மைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொரு நாளும் நம்மை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும்' என்று அறந்தாங்கி நிஷா கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.