அனுமதியின்றி கேப்டன் மில்லர் படப்பிடிப்பு... தடை விதித்தார் தென்காசி மாவட்ட ஆட்சியர்

தென்காசி: கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடை... தென்காசி மாவட்டத்தில் புலிகள் காப்பகம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகே மத்தளம்பாறை கிராமப் பகுதியில் நடைபெற்று வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விதிமீறல்களுடன் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து படப்பிடிப்பை நிறுத்தி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. பிரியங்கா அருள்மோகன், சந்தீப் கிஷன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

1930-கள் மற்றும் 40-களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து பீரியட் படமாக எடுக்கப்பட்டு வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே நடந்து வருகிறது.

இந்நிலையில், கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு நடைபெற்று வரும், தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை கிராமத்திற்கு அருகில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு மண்டலத்தில், செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு பலமுறை மனு அளித்தும் பலனில்லை சமூக ஆர்வலர்கள் கூறியிருந்தனர். மேலும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் செங்குளம் கால்வாய் கரையின் உயரத்தை சுமார் 8 அடியிலிருந்து 2 அடியாக குறைத்து, கரையில் எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு தனியார் நிலத்தை சமன்படுத்த படக்குழுவினர் பயன்படுத்தி உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

அனுமதியின்றி புலிகள் காப்பகத்திற்கு அருகே மெகா செட் அமைத்து, வெடிகுண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை படக்குழு படமாக்குவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்நிலையில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது கரும்புகை சூழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தென்காசி மாவட்டத்தின் எந்த துறையிலும் அனுமதி பெறப்படவில்லை என கூறி, தற்போது ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.