நடிகர் கவினுக்கு இன்று திருமணம் ..பிரபலங்கள் வாழ்த்து தெரிவிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர் கவின். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 2017-ம் ஆண்டு வெளியான ‘சத்ரியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதையடுத்து 2019ஆம் ஆண்டு நடந்த ‘பிக்பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறினார். இதைத் தொடர்ந்து ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் கவின் நடித்து வெளியான ‘டாடா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தனது காதலியான மோனிகாவுடன் கவினுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இத்திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.கவின் அடுத்ததாக நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.